×

பூனைமீது பவனி வரும் அம்பிகை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கொழுந்து விட்டு எரியும் பல சிதைகள். அவைகள் எழுப்பிய கருப்புப் புகை கருமேகம் போல எங்கும் ஊடுருவி, அந்தக் கதிரவனையே மறைத்துவிட்டிருந்தது. ஆந்தைகளும், கழுகுகளும், காக்கைகளும் விநோதமாக ஒலி எழுப்பி மேலும் அந்த இடத்தை பயங்கரமாக மாற்றியது. கோரமான அந்த மயானத்தில் ஒரு பெரும் கூட்டம் அன்று கூடி இருந்தது. அனைவரின் முகமும் கல்லாக இருண்டு இருந்தது. வேதனையை தாள முடியாமல் பலரும் விம்மினார்கள்.

அந்தக் கூட்டத்தில் பெரும் வணிகர்கள், ராஜப் பிரமுகர்கள், சாதாரண மக்கள் என அனைவரும் இருந்தார்கள். இப்படி தங்களுக்குள் இருந்த பேதம் அனைத்தையும் மறந்து அனைவரும் ஒன்றாக ஒருவரின் மறைவுக்காக வருந்துகிறார்கள் என்றால் விஷயம் என்னவாக இருக்க முடியும். ஒரு பெரும் மனிதர் தனது உயிர் நீத்திருக்க வேண்டும். இவ்வாறு நாம் யூகித்தால் அது மிகப் பெரிய தவறு.

ஆம் இறந்திருந்தது, பெரிய மகானோ, ஞானியோ, பெரும் மனிதரோ இல்லை. ஒரு சாதாரண குழந்தை. அதுவும் பிறந்து ஒரு நாள் கூட முழுதும் ஆகாத குழந்தை. ராஜாதி ராஜாவும், மனுவின் குமாரனும் ஆன பிரியவிரதன் மகன் தான் அது. ஆம் மனிதர்களின் தந்தை என்றும் உலகின் முதல் மனிதன் என்றும் அழைக்கப் படும் அதே மனுவின் முதல் மகன் பிரியவிரதனின் குழந்தை அது. பிரியவிரதனுக்கு பல நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. அவனும் அவனது மனைவி மாலினியும் பல நாட்களாக, குழந்தை வரம் வேண்டி, வேண்டாத தெய்வமில்லை, செய்யாத பூஜையில்லை, நடத்தாத யாகம் இல்லை. பிறகு காசிபர் செய்த புத்ர காமேஷ்டி யாகத்தின் பலனாக மாலினி தேவியார் கருவுற்றாள்.

நாடே புதிய இளவரசு வரப்போவதை விழாவாக கொண்டாடியது. ஆனால் அந்த சந்தோசமும் வெகு நாட்கள் நீடிக்க வில்லை. கருவுற்ற அரசி பத்து திங்கள் ஆகியும் குழந்தையை ஈன்றெடுக்க வில்லை. பன்னிரண்டு தேவ வருடங்களாக கருவை சுமந்தாள் அந்த புண்ணியவதி. மக்களுக்கும் மன்னனுக்கும், காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்து போனது. பட்டத்து அரசியான மாலினியும் நம்பிக்கையை இழந்தாள்.

ஆனால் ஒரு சுப யோக சுப தினத்தில் அவள் வலி கண்டு, ஒரு மகவை ஈன்றெடுத்தாள். இதுவரைக்கும் பிரியவிரத மன்னனையும், மக்களையும் சோதித்த விதி அமைதி அடையாமல், மேலும் அவர்களை சோதிக்க வேண்டும் என்று எண்ணியது போலும். பிள்ளை இல்லாத கவலையையும், இளவரசாக வருங்காலத்தை வழி நடத்த ஒருவரும் இல்லையே என்ற கவலையையும் நீக்க வந்த குழந்தை உயிர் இல்லாமல் பிறந்தது.பன்னிரண்டு தேவ வருட எதிர் பார்ப்பு, இரண்டே நொடியில் சின்னாபின்னமானது.

இருந்தாலும் மனதை தேற்றிக் கொண்டு, பிணமாகப் பிறந்த பிஞ்சை, ராஜ மரியாதையோடு அடக்கம் செய்ய, நாடே சுடு காட்டுக்கு வந்திருந்தது. அந்த கூட்டத்தில் நடு நாயகமாக சோகமே உருவாக, கண்களில் பொங்கும் கண்ணீரை அடக்கியவாறு நின்றிருந்தான் பிரியவிரதன். மனமெல்லாம் பொங்கியக் கவலையால், ஆகாசத்தை பார்த்து இறைவனிடம் முறையிட்டுக் கொண்டிருந்தான்.

‘‘இறைவா உனக்கு கண்களே இல்லையா? நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏன் இப்படி சோதனைக்கு மேல் சோதனை அளிக்கிறாய்?’’ என்று அவன் மனதால் புலம்பியபடி இருந்த அந்த சமயம், ஆகாய மார்க்கமாக ஒரு தேவதை சென்றுக் கொண்டிருந்தாள். அவனது சோக நிலையை கண்டவள், வானம் விட்டு இறங்கி பூமிக்கு வந்தாள். மயான பூமியில் திடீரென்று ஒரு தேவதையை கண்டதும் அனைவரும் மலைத்துப் போனார்கள். ஒருவழியாக சுய நினைவுக்கு வந்தவர்கள், அவளை வணங்கினார்கள். பிரியவிரதன் அந்த தேவதையை வணங்கினான். பிறகு பணிவாக ‘‘தேவி தாங்கள் யார் என்று நான் அறியலாமா?’’ என்று பணிவாக வினவினான்.

அவனை கண்டு புன்னகைத்த அந்த தேவி தனது அபய ஹஸ்தம் காட்டி அவனுக்கு ஆதரவு அளித்து, அழகிய புன்முறுவல் பூத்த படி பேச ஆரம்பித்தாள். ‘‘தர்மம் வழுவாத மனு வழி வந்த மன்னனே! நான் பிரகிருதியின் (இயற்கையின்) ஆறாவது அம்சமான ஷஷ்டி தேவி. முன்பு தேவர்கள் அசுரர்களை நோக்கி தொடுத்த போரில், தேவர்களின் சேனைக்கு தலைமையேற்று, போரிட்டு வெற்றி பெற்றதால் என்னை தேவசேனை என்று அழைப்பார்கள்.

முருகப் பெருமானின் பிராண சக்தியான நான் அவரது முதல் தாரமான தேவசேனை ஆவேன். ஐராவதத்தால் வளர்க்கப் பட்ட மாதேவி நான். தர்மம் வழுவாத மா மன்னா, உனது தர்மத்தை மெச்சி உனது குழந்தையை நான் உயிர்பிக்கிறேன். அவன் சுவிரதன் என்ற பெயரோடு நீண்ட நாள் அரசாண்டு பெரும் புகழ் பெறுவான் ஆசிகள்!’’ என்று முத்துகளாய் வார்த்தைகளை உதிர்த்த ஷஷ்டி தேவி, தனது கடைக் கண்ணால், மனுவின் குழந்தையை பார்த்தாள். அடுத்த நொடி அந்தக் குழந்தை கை கால்களை அசைத்து ‘‘குவா குவா’’ என்று அழ ஆரம்பித்தது.

கூடி இருந்தவர் அனைவரும் தேவியின் பெருமையை உணர்ந்தவர்களாய் அவளது பாதத்தில் விழுந்தார்கள். மனு வம்சத்தை விளங்க வைத்த தேவியை கை நழுவிய பொருளைப் போல பூமியில் விழுந்து போற்றித் துதித்து, அர்ச்சித்து வணங்கி மகிழ்ந்தான். அனைவருக்கும் தனது வலது கரம் காட்டி அருளாசி வழங்கிய தேவி காற்றோடு காற்றாக கரைந்து மறைந்து போனாள். தேவி பாகவதம் கூறும் இந்த ஷஷ்டி தேவியை, பிள்ளைகளை காக்கும் தேவியாக இன்றும் வட நாட்டில் வணங்கி வருகிறார்கள். ஒப்பில்லா இந்த தேவி, கருப்புப் பூனையையே தனது வாகனமாக கொண்டுள்ளாள். இந்த தேவியை வேண்டி இருக்கும் விரதத்தின் மகத்துவத்தை பின் வரும் கதை மூலம் அறியலாம்.

வட தேசத்தில், ஒரு வீட்டில், ஒரு பெண் பிரசவ வலி கண்டு அலறிய படி இருந்தாள். நல்ல விதமாக குழந்தையும் பிறந்தது. ஆனால் பிறந்த அடுத்த நொடி எங்கு எப்படி என்று தெரியாமல் அது மறைந்து போனது. இப்படியே ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து குழந்தைகள் பிறந்து காணாமல் போனது. ஆறாவதாக அந்த அம்மையார் பிரசவ வலி கண்டாள். அப்போது அவள் யாரும் என் அறையில் இருக்க வேண்டாம் இந்தக் குழந்தையாவது எனக்கு தங்க வேண்டும் எல்லாரும் வெளியில் சென்று விடுங்கள் என்று கத்தினாள். ஆகவே அவளது உறவினர்கள் அவளை அறையில் தனியாக விட்டு வெளியில் சென்றார்கள்.

இந்த அம்மையார் பின் வாசல் வழியாக கஷ்டப் பட்டு நடந்து, வீட்டை விட்டு வெளியேறி காட்டை அடைந்தாள். வீட்டில் இருந்தால் தான் குழந்தை துலைந்து போகிறது. காட்டில் தனியாக அதை பிரசவித்தால், குழந்தை காணாமல் போகாது என்று எண்ணினார் அந்த அம்மையார். ஆகவே காட்டில் தனியாக ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்து கொண்டாள். குழந்தையையும் பிரசவித்தாள். பிரசவ வலி மயக்கத்தில் அவள் கண் அசந்த அடுத்த நொடி ஒரு கருப்புப் பூனை வந்து அவளது குழந்தையை எடுத்துக் கொண்டு ஓடியது. மடியில் கணம் குறைந்தது போல உணர்ந்த அம்மையார் சட்டென்று கண்விழித்துப் பார்த்தாள். பூனையை துரத்தி கொண்டு பின்னே ஓடினாள்.

அந்த கருப்பு பூனை நேராக ஓடிச் சென்று ஷஷ்டி தேவியின் காலடிக்கு அருகில் நின்று கொண்டது. ‘‘யாருடைய குழந்தை இது’’. அமுதமாக வினவினாள் தேவி.‘‘இந்தக் குழந்தை, அதோ என்னை துரத்தி வருகிறாளே அந்த அம்மையாருடையது. ஒரு நாள் அவர்கள் வீட்டில் உங்களை எண்ணி அரண்ய ஷஷ்டி விரதம் இருந்தார்கள். அப்போது வித விதமாக பட்சண வகைகளை உங்களுக்கு படைக்க தயாரித்தார்கள்.

கர்ப்பமாக இருந்த இவள், பசி பொறுக்க முடியாமல் பட்சணங்களை உண்டு விட்டாள். வீட்டில் இருந்தவர்கள் பட்சணம் எங்கே போனது என்று கேட்டார்கள். இவளோ ஒரு கருப்புப் பூனை வந்து அனைத்தையும் உண்டு விட்டது என்று பொய் சொல்லி விட்டாள். ஆனால் நான் என்ன தவறு செய்தேன் தாயே. என் மீது ஏன் அவள் பழி சுமத்த வேண்டும்? அதனால் கருப்புப் பூனையான எனக்கு இவள் மீது கடும் கோபம். ஆகவே இவளது குழந்தைகள் அனைத்தையும் கவர்ந்து வந்து விட்டேன்’’ என்று தேவியின் வாகனம் குழந்தையை போல செல்லம் கொஞ்சியபடியே அவளிடம் முறையிட்டது.

அதை கேட்ட தேவியின் கண்கள் சிவந்தது. ‘‘அவள் தவறே செய்திருந்தாலும், நீ கொடுத்த தண்டனை மிகப் பெரிய தண்டனை. ஆகவே நீ என் வாகனமாகவே இருந்தாலும் உன்னை அமங்களத்தின் சின்னமாகவே கருதுவார்கள்’’ என்று பூனையை சபித்தாள் தேவி. ஆகையால் தான் இன்று வரை கருப்புப் பூனை அமங்களமானதாகவே கருதப்படுகிறது.

அடுத்து பூனையை துரத்திக் கொண்டு மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்க ஓடிவரும் அம்மையாரை பார்த்து, தேவி கருணை புன்னகை பூத்தாள். ஷஷ்டி தேவியின் அருகில் வந்ததும் அவளை நிலத்தில் விழுந்து நமஸ்கரித்தாள் அவள். அவளுக்கு ஆசி வழங்கிய தேவி ‘‘குழந்தாய்! கலக்கம் வேண்டாம்.

நீ இழந்த உனது ஆறு குழந்தைகளையும் இதோ உன்னிடம் ஒப்படைக்கிறேன். இவர்கள் அனைவரும் தீர்க்க ஆயுளுடனும் பெயர் புகழுடனும் வாழ்வாங்கு வாழ்வார்கள்’’ என்று யாழை பழிக்கும் குரலில் வரம் தந்தாள் தேவி. அடுத்த நொடி ஆறு குழந்தைகளும் அவளது மடியில் வந்தது. அனைத்து குழந்தைகளையும் வாரி அணைத்து உச்சி முகர்ந்து பரவசம் அடைந்தாள் அவள்.

பிறகு ஷஷ்டி தேவியை பார்த்து ‘‘உன் கருணைக்கு பாத்திரமாக நான் என்ன புண்ணியம் செய்தேன் தேவி? இந்த ஏழைக்கு அருளிய உன் கருணையே கருணை. அம்மா! இனி நான் உன்னை எண்ணி விரதம் இருந்து, உன்னை எந்நாளும் மறவாமல் இருப்பேன். இது உன் திருவடிகளில் மீது ஆணை!’’ என்று தேவியின் பாதத்தில் விழுந்து வணங்கினாள் அந்த அம்மையார். அவளை கருணை பொங்கும் விழியால் கடாக்ஷித்தாள் இறைவி.

இன்றும் குழந்தைகளின் நலனை காக்கும் தேவியாக ஷஷ்டி தேவியை (முக்கியமாக) வட தேசங்களில் வழிபடுகிறார்கள். பிரசவம் நடந்த அறையில், குழந்தை பிறந்த ஆறாம் நாள் மற்றும் இருபத்தி ஓராம் நாள் அன்றும் இவளை வழிபடுவது உத்தமம்.

உலகமே அவளது குழந்தை தான் என்னும் போது, நம்மையும் அவளது குழந்தையாக எண்ணி பாதுகாப்பாள் என்பதில் எள்ளவும் சந்தேகம் வேண்டாம். இவளை சுக்ல பட்ச ஷஷ்டி திதியில் வணங்கினால், மக்கட்பேறு இல்லாதவர்களுக்கு மக்கட்பேறு கிடைக்கும். விவாகம் நடக்காதவர்களுக்கு சீக்கிரம் அது கை கூடும். பரம தரித்ரனும் பெரும் செல்வந்தன் ஆவான். இந்த தேவியின் அருளால் நடக்காதது ஒன்றுமே இல்லை. தேவி பாகவதம் புகழும் இவளை நாமும் போற்றி பெரும் பேறு பெறுவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

The post பூனைமீது பவனி வரும் அம்பிகை appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Ambigai ,
× RELATED ரத்னம் விமர்சனம்